
இன்றைய காலத்தில், கல்லீரல் கொழுப்பு பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் இந்த பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், அதன் தீவிரத்தை குறைக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த நிலையில், கொழுப்பு கல்லீரலின் சில முக்கிய அறிகுறிகளை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். குறிப்பாக, முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் கொழுப்பு கல்லீரலின் முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம்.
முகம் மற்றும் தோலில் ஏற்படும் மாற்றங்கள்:
1. முக வீக்கம்: கொழுப்பு கல்லீரல் உள்ளவர்களுக்கு முகம் வீங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. கல்லீரல் போதுமான அளவு அல்புமின் என்ற புரதத்தை உற்பத்தி செய்யாததால், உடலில் திரவம் தக்கவைக்கப்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், திரவம் திசுக்களில் கசிந்து முகம் வீக்கமாக தோன்றலாம். முகம் வீங்கியிருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
2. அரிப்பு: முகத்தில் தொடர்ந்து அரிப்பு ஏற்படுவது கொழுப்பு கல்லீரலின் மற்றொரு அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக, நீண்ட நாட்களாக அரிப்பு இருந்தால், அது கொழுப்பு கல்லீரலின் அறிகுறியாக கருதப்பட வேண்டும்.
3. சொறி: தோலில் தடிப்புகள் அல்லது சொறி ஏற்படுவது கொழுப்பு கல்லீரலின் அறிகுறியாக இருக்கலாம். கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் சில சத்துக்களை சரியாக உறிஞ்சுவதில்லை. இதன் காரணமாக தோலில் சொறி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
4. தோல் சிவத்தல்: சிலருக்கு தோல் மெல்லியதாகவும், சிவந்தும் காணப்படலாம். இதுவும் கொழுப்பு கல்லீரலின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். தோல் அதிகமாக சிவந்திருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
5. கழுத்துப் பகுதியில் கருமை: கழுத்துப் பகுதியில் தோல் கருமையாகவும், மடிப்புகளுடனும் காணப்படுவது கொழுப்பு கல்லீரலின் அறிகுறியாக இருக்கலாம். இது இன்சுலின் எதிர்ப்பு காரணமாக ஏற்படுகிறது. இன்சுலின் சரியாக வேலை செய்யாததால், உடலில் அதிக இன்சுலின் உற்பத்தி ஆகி, தோலில் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படும்.
6. மஞ்சள் காமாலை: தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவது மஞ்சள் காமாலை ஆகும். இதுவும் கொழுப்பு கல்லீரலின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். கல்லீரல் சரியாக செயல்படாதபோது, பிலிரூபின் என்ற பொருள் உடலில் அதிகமாக உற்பத்தி ஆகி, தோலில் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்தும்.
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் அனைத்தும் கொழுப்பு கல்லீரலின் உறுதியான அறிகுறிகள் என்று கூற முடியாது. வேறு சில உடல் நல பிரச்சனைகளுக்கும் இதே அறிகுறிகள் இருக்கலாம். எனவே, இந்த அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், சுயமாக சிகிச்சை மேற்கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.